இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட காரணங்களினால் தொடரிலிருந்து விலகினார்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள இளைஞர்களின் கிரிக்கெட் திறனை வெளிகொண்டுவரும் நோக்கில், அம்மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சி மையங்களை உருவாக்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாள்களாக அங்குள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆல்ரவுண்டர் அப்துல் சமத் தன்னை மிகவும் கவர்ந்ததாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, “ஐபிஎல் தொடரின் 13ஆவது சிசனில் அப்துல் சமத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விளையாடுவதற்கான வசதிகள் இல்லாமல் இருந்தநிலையில், அவர் தனது திறமையாலும், ஊக்கத்தாலும் ஐபிஎல் தொடரில் தடம்பதித்துள்ளார்.
எனக்கு சமத் மீது நம்பிக்கை இருக்கிறது, அவரிடமும் பேசியிருக்கிறேன். அவர் விளையாடுவதைப் பார்த்து பல வீரர்கள் முன்வருவார்கள். அவர்களுக்கு சரியான வசதிகள் கிடைத்தால் எதிர்காலத்தில் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: ஏடிகேவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஜாம்ஷெட்பூர் எஃப்சி!