மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் காயமுற்றார். இதனால், அவர் வகித்து வந்த கேப்டன் பொறுப்பு ரிஷப் பந்துக்கு கிடைத்துள்ளது. ஐபிஎல் திருவிழா ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்நிலையில், ஸ்ரேயாஷ் ஐயர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இவர், தொடரில் முதல் பாதியில் விளையாட மாட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பதவி ரிஷப் பந்துக்கு கிடைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, “ரிஷப் பந்துக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் உறுதியாக சொல்கிறேன் டெல்லி அணி வெற்றி நடைபோடும், ரிஷப் பந்தும் சிறந்த கேப்டனாக செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ரிஷப் பந்த் தனது அறிக்கையில், “நான் வளர்ந்த இடம் டெல்லி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது ஐபிஎல் பயணம் தொடங்கியது. இந்த அணியை ஒரு நாள் வழிநடத்த வேண்டும் என்பது என் கனவு. இன்று, அந்த கனவு நனவாகும்போது, நான் தாழ்மையுடன் உணர்கிறேன்.
இந்த பொறுப்பிற்கு போதுமான திறமை வாய்ந்தவராக என்னை கருதிய எங்கள் குழு உரிமையாளர்களுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சிறந்த பயிற்சியாளர்கள், ஊழியர்கள், என்னைச் சுற்றிலும் திறமையான மூத்த வீரர்களுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறந்த விளையாட்டை கொடுக்க ஆவலுடன் உள்ளேன். எனினும், என்னால் காத்திருக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்துவது தொடர்பாக அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “கடந்த இரண்டு தொடரிலும் ரிஷப் பந்த் தலைமையில் அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றிகரமாக முன்னேறி வரும் இளம் ரிஷாபிற்கு இது ஒரு மகத்தான வாய்ப்பாகும், இது ஒரு புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான நம்பிக்கையை அவருக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பயிற்சியாளர் குழு அவருடன் பணியாற்றுவதில் உற்சாகமாக உள்ளது. சீசன் தொடங்கும் வரை எங்களால் காத்திருக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : ஐபிஎல் 2021: டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த்