இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து அதற்கான நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது.
இந்த ஊரடங்கால் தினக் கூலிகள், அடித்தட்டு மக்கள், சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பலரும் கடுமையான நிதிப் பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டனர்.
இவர்களது நிலைமையை அறிந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் மேலாளர் ஹார்லி மெட்காஃப் 1.5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். இதுகுறித்து இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ரவி சவுகான் கூறுகையில், "இந்தக் கடினமான சூழலில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உதவுவதற்காக ஸ்டீவ் வாக்கின் மேலாளர் ஹார்லி மெட்காஃப் முன்வந்துள்ளார். அவர் அளித்த 1.5 லட்ச ரூபாயை 30 வீரர்களின் கணக்குகளில் தலா 5 ஆயிரம் செலுத்தப்பட்டது. அவர்கள் எப்போதும் இந்த உதவிக்காக ஸ்டீவ் வாக்கிற்கும், ஹார்லி மெட்காஃப்பிற்கும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்" என்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஸ்டீவ் வாக் இந்தியாவிற்கு வருகைதந்ததிலிருந்து, அவரது மேலாளர் ஹார்லி மெட்காஃப்பிற்கும் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் சங்கத்திற்கும் நல்லுறவு நீடித்துவருகிறது.