டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்தாக்காட்டாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளங்குகிறார். பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கி ஓராண்டு தடைக்குப் பிறகு, தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரில் அவர் விளையாடிவருகிறார்.
அந்த வகையில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம், லார்ட்ஸில் விளையாடிய ஒரு இன்னிங்ஸில் 92 ரன்கள் என இந்தத் தொடரில் 328 ரன்களை விளாசியிருந்தார். இந்த நிலையில், பவுன்சர் பந்து தாக்கியதால் மூன்றாவது போட்டியில் விளையாடாமல் இருந்த அவர், தற்போது மான்செஸ்டரில் நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் ரீஎன்ட்ரி தந்தார்.
நேற்றைய முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 44 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 60 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இரண்டாம் ஆட்டநாள் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிராவிஸ் ஹெட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த மேத்யூ வேட் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக பேட்டிங் செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26ஆவது சதத்தை பதிவு செய்தார். இந்தத் தொடரில் அவர் விளாசும் மூன்றாவது சதம் இதுவாகும்.
அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 26 சதங்களை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது 121ஆவது இன்னிங்ஸில் அவர் இதனை எட்டியுள்ளார். இப்பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் (69 இன்னிங்ஸ் ) முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல, ஆஷஸ் தொடரில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் அவர் 11 சதங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 11 சதங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு சமமாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.