இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 86 ரன்களை அடித்தார்.
அதன்பின் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, அஜாஸ் படேலின் சுழலில் சிக்கி முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் முதல் இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்களை எடுத்தது.
பதினேழு ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வாட்லிங் 77 ரன்களை அடித்திருந்தார்.
அதன்பின் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே, லஹிரு திரிமன்னேவின் அதிரடியால் இலங்கை அணி வெற்றியை நோக்கிச்சென்றது.
அதிரடியாக விளையாடிய திரிமன்னே 64 ரன்களிலில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அணியின் கேப்டன் கருணாரத்னே சதமடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய திமுத் கருணாரத்னே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இலங்கை அணி தனது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.