இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இன்று இரண்டாவது டி20 போட்டி நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து இலங்கையின் தொடக்க வீரர்களாக தனுஷ்கா - அவிஷ்கா ஆகியோர் களமிறங்கினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்த நிலையில், அவிஷ்கா 22 ரன்களில் வெளியேற, பின் அதிரடி வீரர் குசால் பெரேரா களமிறங்கினர். பெரேரா அதிரடியாக ஆட, தனுஷ்கா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர் எட்டாவது ஓவரை வீசிய சைனியின் பந்தை தனுஷ்கா அடிக்க முயன்று 20 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஃபெர்னான்டோ 10 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய குசால் பெரேரா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 97 ரன்கள் எடுத்து தடுமாறியது.
இதையடுத்து ஆட்டத்தில் இந்திய அணியின் கை சிறிது ஓங்கியது. இதனைப் பயன்படுத்தி இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். பனுகா ராஜபக்ஷா 12 பந்துகளில் 9 ரன்களிலும், ஷனகா 8 பந்தில் 7 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இலங்கை அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.
இதையடுத்து களமிறங்கிய டெய்லண்டர்களான உடானா, மலிங்கா ஆகியோரின் விக்கெட்டுகளை ஷர்துல் தாகூர் அடுத்தடுத்து வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார். கடைசி ஓவரில் இலங்கை அணி வீரர் ஹசரங்கா ஹாட்ரிக் பவுண்டரிகள் விளாச இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், சைனி , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க: நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு: இர்பான் பதான்!