சாலைப் பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் ராய்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இலக்கை லெஜண்ட்ஸ் அணி, வங்கதேச லெஜண்ட்ஸ் அணியுடன் மோதியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்த இலங்கை அணியில் ஜெயசூர்யா நான்கு ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த தில்சன் 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய உபுல் தரங்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிவந்த தரங்கா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
இதன் மூலம் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச லெஜண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் நஸிமுதினைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, இலங்கை அணியின் வெற்றி 10ஆவது ஓவரிலேயே உறுதியானது.
இருப்பினும் தொடர்ந்து போராடிய வங்கதேச அணி 20 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து, 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இதையும் படிங்க: துபாய் ஓபன்: தொடரிலிருந்து வெளியேறியது சானியா இணை!