இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வொயிட் வாஷை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 55, தனஞ்செயா டி சில்வா 51, கேப்டன் கருணரத்னே 44 ஆகிய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தில் 50 ஓவர்களில் இலங்கை அணி 307 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப் - சுனில் அம்ப்ரிஸ் இணை சிறப்பான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த நிலையில், சுனில் 60 ரன்கள் எடுத்து வெளியேற, பூரான் - ஹோப் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடர்ந்து ஹோப் 72 ரன்களிலும், பூரான் 50 ரன்களிலும் ஆட்டமிழக்க 43 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து கேப்டன் பொல்லார்ட் 49 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறு முனையில் ஃபேபியன் ஆலன் அதிரடியாக அடி ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் கொண்டு வந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஃபேபியன் ஆலன் 37 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணியின் வெற்றி உறுதியானது.
இறுதியாக, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-0 எனக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இலங்கை அணி சார்பாக மேத்யூஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகான ஏஞ்சலோ மேத்யூஸும், தொடர்நாயகனாக ஹசரங்காவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்த பொல்லார்ட்