பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று லாகூரில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனுஷ்கா குணதிலக ஆகியோர் அதிரடியானத் தொடக்கத்தை தந்தனர். சிறப்பாக விளையாடிய குணதிலக அரை சதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக தனுஷ்கா குணதிலக 57 ரன்களை எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஹொசைன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து வெற்றியை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பாபர் அசாம் 13 ரன்களிலும், அஹ்மத் ஷெசாத் 4 ரன்களிலும், உமர் அக்மல் முதல் பந்திலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
அதன் பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் இசுரு உதானா, நுவான் பிரதீப் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் இலங்கை அணி முதலாவது டி20 போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தனுஷ்கா குணதிலக ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: தோனிக்கு அடுத்து இவரு மட்டும் தான்! - பட்டியலில் இணைந்த சர்ஃபராஸ்