டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் ஹைதராபாத் அணிக்காக வார்னர் - சஹா இணை களமிறங்கியது. முதல் ஓவரில் மட்டும் அடக்க வாசித்த இந்த இணை, இரண்டாவது ஓவரிலேயே புயலாக மாறியது.
இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சாளர் என பேசப்பட்டு வரும் ரபாடா வீசிய இரண்டு ஓவரில் 37 ரன்களை சேர்த்தனர். பவர் ப்ளே ஓவர் முடிவதற்குள் வார்னர் அரைசதம் விளாச, அணியின் ஸ்கோர் 6 ஓவர்களில் 77 ரன்களை எடுத்தது.
ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்கள் குறையாமல் சேர்க்க, 9ஆவது ஓவர் முடிவிலேயே ஹைதராபாத் அணி 100 ரன்களைக் கடந்தது. இதன் பின்னர் பர்த்டே பாய் வார்னர் 66 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் சஹா கையில் எடுத்தார். அதன் பின் மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பவுண்டரி, சிக்சர் என சஹா விளாச, ஹைதராபாத் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது.
இந்த சீசனில் ஆடிய முதல் போட்டியில் அரைசதத்தைக் கடந்த சஹா, ஒரு கட்டத்தில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராவிதமாக 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் மனீஷ் பாண்டே கைகளுக்கு ஆட்டம் செல்ல, வில்லியம்சன் சிங்கிள்களை தட்டத் தொடங்கினார். 19 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் வில்லியம்சன் பவுண்அரி அடிக்க, ரபாடா விட்டுக் கொடுத்த ரன்கள் 50ஐ கடந்தது. இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் சேர்த்தது. மனீஷ் பாண்டே 44 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: ‘இந்தியன் கிரிக்கெட்டர்’ பயோவை நீக்கிய ரோஹித்!