கிரிக்கெட்டின் ரன் மெஷின் என கொண்டாடப்படும் கோலிக்கு, நடப்பு ஆண்டில் ரன் குவிக்க சற்று கடினமாகவே உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிவரும் அவர் (டி20 - 175 ரன்கள், ஒருநாள் - 75 ரன்கள், டெஸ்ட் - 21 ரன்கள்) என ஒரு அரைசதம் உட்பட 201 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இழந்த ஃபார்மை, கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கோலி மூன்று ரன்களுக்கு டிம் சவுதியின் பந்துவீச்சில் எல்.பி.டபள்யூ. முறையில் அவுட்டாகினார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து சவுதி பந்துவீச்சில் கோலி அவுட்டாவது இது 10ஆவது முறையாகும். இதன்மூலம், கோலியை 10 முறை அவுட் செய்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை டிம் சவுதி பெற்றுள்ளார்.
சவுதி கோலியை டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறையும், ஒருநாள் போட்டிகளில் ஆறு முறையும், டி20 போட்டிகளில் ஒருமுறையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இறுதியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் தனது முதலிடத்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திடம் பறிகொடுத்து இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நியூசிலாந்து பந்துவீச்சில் 242 ரன்களுக்கு சுருண்ட கோலி அண்ட் கோ!