விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்க உள்ளது.
கடந்த முறை (2018-19) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கி தடை பெற்றதால், ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. ஆனால், இம்முறை இவ்விரு வீரர்களும் இந்த தொடரில் விளையாட உள்ளதால் ஆஸ்திரேலியன் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது.
இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரது கம்பேக் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில்,
"எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு அணிக்கும் சவால் தரும் விதமான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றதால் இம்முறையும் இந்திய அணி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் தரும் என நம்புகிறேன். இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் கம்பேக் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது" என்றார்.