சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் அடங்கிய அணிகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஐசிசி இன்று 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் அணியின் பட்டியலை வெளியிட்டது.
இதில் ஒருநாள், டி20 என இரண்டு அணியிலும் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார். ஒருநாள் அணியில் ஸ்மிருதி தவிர்த்து ஜுலன் கோஸ்வாமி, பூனம் யாதவ், ஷிக்கா பாண்டே உள்ளிட்ட இந்திய வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். சிறந்த டி20 அணியில் மந்தனா, தீப்தி சர்மா, ராதா ஆகிய இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த இரண்டு அணிகளுக்கும் ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி, இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் 441 ரன்களையும் 21 விக்கெட்டுகளையும் இந்தாண்டு எடுத்துள்ளார். இது மட்டுமல்லாது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள், 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனையையும் எலிஸ் பெர்ரி நிகழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.