இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் டல்லாஸ் ஆலகப்பெரும, இலங்கை வீரர்கள் மீது விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியிட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
ஐசிசி விசாரணையில் தற்போது அணியில் விளையாடி வரும் வீரர்கள் இல்லை எனவும், முன்னாள் வீரர்களிடமே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிடவும் மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கை வீரர்களிடம் விசாரணை நடந்து வரும் வேளையில் இதுபற்றி தகவல் தெரிவிக்க இயலாது என்று ஐசிசி தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அணி மீது மேட்ச் பிக்ஸிங், ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுபோன்ற தவறுகள் மீண்டும் யநிகழாமல் இருக்க கடுமையான விதிமுறைகளை கிரிக்கெட் வாரியம் கொண்டுவந்தது.
அப்போது, மேட்ச் பிக்ஸிங் சட்டவிரோதமானது எனவும், வெளிநாட்டு தொடர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது 555, 000 டாலர்கள் அபராதமும், 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அத்துடன் சூதாட்டத்தில் ஈடுபடும் யாரும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புள்ளவர்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, 2018ஆம் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தில்காரா லோகுஹெட்டிகே மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஏற்கனவே இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தேர்வாளருமான சனாத் ஜெய்சூர்யா, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஸேய்சா ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக தில்காரா லோகுஹெட்டிகே ஐசிசி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக வாரியத்திலிருந்து நீக்கப்பட்டார்.