கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் உலக நாடுகள் பலவற்றில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் முற்றிலுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகிற ஜூலை மாதம் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பெருந்தொற்றின் காரணமாக உலகில் பல்வேறு விளையாட்டுக்கள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், இந்தியா - இலங்கை தொடரும் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம், திட்டமிட்டபடி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரை நடத்த வேண்டுமென பிசிசிஐயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு அனுப்பிய மின்னஞ்சலில், "இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரை திட்டமிட்டபடி நடத்த சாத்தியக் கூறுகள் உள்ளன. மேலும் வீரர்களின் பாதுகாப்பிற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். அதேபோல் கடுமையான ஊரடங்கிற்கு மத்தியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பார்வையாளர்களின்றி போட்டிகள் நடத்துவதற்கும் சம்மதம் தெரிவிக்கிறோம். ஏனெனில் இத்தொடர் ரத்து செய்யப்பட்டால் எங்களுக்கு மிகவும் நிதி நெருக்கடி ஏற்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊதிய குறைப்பு இல்லை; தேவையற்ற செலவுகளை குறைக்க பார்க்கின்றோம் - பிசிசிஐ!