இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, இன்று கண்டி - பல்லேகல மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசால் பெரேரா 15 ரன்களிலும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 9 ரன்களிலும், ஜெயசூர்யா 16 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதனையடுத்து களமிறங்கிய அனுபவ வீரர்களான மேத்யூஸ், ஷனக்கா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துசன் ஷனக்கா 31 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபாபியன் ஆலன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், லிண்டல் சிம்மன்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த பிராண்டன் கிங் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரை சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர், ஆண்ட்ரே ரஸ்சல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அந்த அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்சல் 14 பந்துகளில் ஆறு சிக்சர்களை பறக்கவிட்டு 40 ரன்களை சேர்த்ததன் மூலம் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:மனைவியின் ஆட்டத்தை காண தொடரிலிருந்து விலகிய ஸ்டார்க்!