கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர். இவரது பந்துவீச்சைக் கண்டு அஞ்சாத பேட்ஸ்மேன்களே இல்லை என்று கூறலாம். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இவரது வேகப்பந்துவீச்சினால், 19 வீரர்கள் காயம் அடைந்து பாதியிலேயே ரிடயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது சமூகவலைதளங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் ஆட்டத்திறன் குறித்து தனது கருத்து தெரிவித்து பிசியாக உள்ளார். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களிடம் 15 நிமிடங்களுக்கு கேள்வி பதில் செஷனை வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, ரசிகர்களும் #AskShoaibAkhtar என்ற ஹேஸ்டேகை பயன்படுத்தி தங்களது கேள்விகளை அவரிடம் கேட்டுவந்தனர். அதில் ஒரு சில கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமான பதில்களை தந்துள்ளார்.
அதில், எந்த போட்டி மற்றும் விக்கெட் இன்றளவும் உங்களால் மறக்க முடியாது என்ற கேள்விக்கு, அக்தர், கொல்கத்தா மைதானத்தில் சச்சினை க்ளீன் போல்ட் செய்ததுதான் தன்னால் மறக்க முடியாத விக்கெட் என்றார். 1999இல் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், அக்தரின் அபாரமான இன்ஸ்விங் யார்க்கர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் சச்சின் க்ளீன் போல்ட் ஆனார். இப்போட்டிக்கு பிறகு, சச்சின் - அக்தர் இருவருக்கும் இடையே நடைபெற்ற போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
இதேபோல், நீங்கள் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன் யார் என்பதற்கு அக்தர், வாசிம் அக்ரம் என்றும், யார் சிறந்த ஆக்ரோஷமானவர் என்ற கேள்விக்கு கங்குலி என்றும் அவர் பதிளித்தார். 1999 உலகக்கோப்பையில் வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் சோயப் அக்தர் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் அணி அந்தத் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேற அக்தரின் பந்துவீச்சும் முக்கிய காரணம்.
2008 ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் அக்தர், கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். டெல்லி அணிக்கு எதிராக தான் அறிமுகமான ஐபிஎல் போட்டியில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
அதேபோல், தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேனை அவுட் செய்வது கடினம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அக்தர், விராட் கோலி என பதிலளித்தார். இந்திய அணியின் கேப்டனான கோலி, தனது சிறப்பான பேட்டிங்கால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். குறிப்பாக, சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 20,000 ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையை படைத்திருந்தார்.
ரசிகர்களின் கேள்விக்கு அக்தர் அளித்த இந்தப் பதில்கள் ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 178 விக்கெட்டுகளும், 163 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்த பயம் இன்னும் அப்படியே இருக்கிறது! #HbdAkhtar