ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் ஷேன் வாட்சன். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துத் துறையிலும் வல்லமை படைத்தவராக இவர் வலம் வந்தார். குறிப்பாக டி20 போட்டிகள் என்றால் வாட்சனின் பேட்டிங் எதிரணியை கலங்கடிக்கும் விதமாக இருக்கும்.
கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வாட்சன், அதன்பின் பிக்பாஷ், ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் மட்டுமே பங்கேற்றுவருகிறார். ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வாட்சன், ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாகவும் உள்ளார்.
இதனிடையே நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டனர். அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஏசிஏ) புதிய தலைவராக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டார்.
அவரைப் போன்று கூடுதலாக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் பதவிகளில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், வீராங்கனை கிறிஸ்டன் பீம்ஸ், முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தாலேகர் ஆகியோர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தான் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ’என்னை இந்த தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததை நான் மரியாதையாக நினைக்கிறேன். எனக்கு இப்போது நிறைய பொறுப்புகள் உள்ளன. ஏனெனில் எனக்கு முன்பாக இந்த இடத்தில் இருந்தவர்கள் நிறைய செய்துள்ளார்கள். பலவற்றை எனக்கு அளித்த கிரிக்கெட்டிற்கு இந்த வாய்ப்பின் மூலமாக நான் மீண்டும் திருப்பித் தருவேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.