ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ஷேன் வார்னே தற்போது தெற்கு லண்டனில் வசித்துவருகிறார். இவர் கடந்தாண்டு லண்டனின் கென்னிங்ஸ்டன் பகுதியில் உள்ள சாலையில் அனுமதிக்கப்பட்ட 64 கிலோமீட்டர் என்ற வேகத்தை காட்டிலும், மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட தனது ஜாகுவார் காரில் சென்றுள்ளார். இதையடுத்து அதிவேகமாக காரை இயக்கிய குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை லண்டன் விம்பிள்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அதிவேகமாக காரை இயக்கியதால் ஷேன் வார்னேவிற்கு ஓராண்டு கார் ஓட்ட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு முதல் ஷேன் வார்னே இதே போன்று ஐந்து முறை வேகக்கட்டுப்பாட்டை மீறியுள்ளார். மேலும் அதற்காக அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தில் 15 அபராத புள்ளிகள் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அவர் ஆறாவது முறையாக விதிமுறையை மீறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கா 1992 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை விளையாடிய ஷேன் வார்னே, 145 டெஸ்ட் போட்களில் 708 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.