இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிம் பெய்ன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஷமி காயம்:
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் பத்தாவது விக்கெட்டாக களமிறங்கிய முகமது ஷமி, கம்மின்ஸ் வீசிய பந்தில் காயமடைந்தார்.
இதனால் களத்திற்கு வந்த மருத்துவர்கள் அவரைச் சோதித்து பார்த்து, அவரால் பேட்டிங்கைத் தொடர முடியாது என அறிவித்தனர். இதையடுத்து அவர் ரிட்டையர் ஹர்ட் முறைப்படி ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.
மருத்துவமனையில் ஷமி:
அதன்பின் பெவிலியனுக்கு திரும்பிய முகமது ஷமியை சோதித்த அணி மருத்துவர்கள் அவரது காயம் குணமடைய, மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து முகமது ஷமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஷமி குறித்து விராட் கோலி:
போட்டி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “ஷமியின் நிலை குறித்து எங்களுக்கு சரியாக தெரியவில்லை. அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அவர் எங்களிடன் கையைக் கூட தூக்கமுடியவில்லை, வலி மிகவும் அதிகமாக உள்ளது என தெரிவித்திருந்தார். அதனால் அவரது நிலை குறித்து மருத்துவ அறிக்கைகள் வந்த பிறகே தெரியவரும்” என்று தெரிவித்தார்.
இதனால் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முகமது ஷமி பங்கேற்பாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:கோலி தலைமையிலான இந்திய அணியின் சாதனையும், சறுக்கலும்!