பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் ஜூன் 28ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய டி20, டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த போட்டிகளில் பங்கேற்கும் 28 வீரர்கள் கொண்ட அணிப் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஷதாப் கான், இளம் வீரர் ஹைதர் அலி, ஹாரிஸ் ரஃப் ஆகிய மூன்று பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முகமது ஹஃபிஸ், வஹாப் ரியாஸ் உள்பட அணியில் மேலும் ஏழு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் அணியில் பாதிக்கப்பட்ட வீரர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியின் உறுப்பினர் மசாங் அலிக்கும் இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்கள் லாகூரில் தங்க வைக்கப்பட்டு ஜூன் 25ஆம் தேதி மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கு அடுத்த நாள் இங்கிலாந்து தொடருக்கான மாற்றப்பட்ட அணி அறிவிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டபடி ஜூன் 28ஆம் தேதி புறப்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.
இன்று தொற்று பாதிக்கப்பட்ட வீரர்கள்: காசிஃப் பாட்டி, முகமது ஹஸ்னைன், ஃபகர் ஜமான், முகமது ரிஸ்வான், இம்ரான் கான், முகமது ஹஃபிஸ், வஹாப் ரியாஸ்.