உலகில் கால்பந்துக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு போட்டி என்றால் அது கிரிக்கெட்தான். அதிலும் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனாலும் ஒரு சில நட்சத்திர வீரர்கள் மட்டுமே இந்திய அணியிலும் இந்திய ஏ அணியிலும் விளையாடிவருகின்றனர்.
இந்நிலையில் ரஞ்சி கிரிக்கெட் என்னும் உள்ளூர் போட்டிகளில் சௌராஷ்ட்ரா அணிக்காக விளையாடிவரும் ஷெல்டன் ஜாக்சன் என்ற வீரர் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு பற்றி வேதனைத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில், 'ரஞ்சி அணிக்காக எங்களது திறமைகளை நாங்கள் வெளிப்படுத்தினாலும் எங்களால் இந்திய ஏ அணிக்கு கூட தகுதி பெறமுடியவில்லை, ரஞ்சி போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நன்றாக விளையாடினாலும் எங்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பூஜ்ஜியமே! இதனால் எங்களது கிரிக்கெட் வாழ்க்கை ரஞ்சி போட்டிகளுடனே முடிந்துவிடும் என்ற கவலை உள்ளது' எனப் பதிவிட்டிருந்தார்.
இவருக்கு ஆதரவாக மனோஜ் திவாரியும், தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது. உங்களின் வலி நியாயமானதே. ஆனாலும் தொடருங்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் என பதிவிட்டிருந்தார்.
இவர்களின் ட்விட்டர் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியதுமே அதனை உறுதி செய்யும் விதத்தில் பிசிசிஐ, “உள்நாட்டு வீரர்கள் போல் தேர்வாளர்களால் சுதந்திரமாக பதில் கூற இயலாது” என பதிவிட்டு தேர்வுக் குழுவில் உள்ள அரசியலை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஷெல்டன் ஜாக்சன் கடந்த ரஞ்சி சீசனில் சௌராஸ்ட்ரா அணிக்காக ஏழு அரைசதங்கள், இரண்டு சதங்கள் என மொத்தம் 854 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஷெல்டன் ஜாக்சன் ட்விட்டர் பதிவும் அதற்கு பிசிசிஐ அளித்த பதிலும் நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.