நடப்பு சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் குரூப் பிரிவு ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், குரூப் ஏ, பி, பிரிவுக்கான ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் மும்பை அணி, மத்தியப் பிரதேச அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி ஹர்திக் தமோர், ஆகார்ஷித் கோமல் ஆகியோர் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 16 ரன்களை எட்டிய நிலையில், ஹர்திக் டமோர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 43 ரன்களிலும், சித்தேஷ் நான்கு ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியின் திரும்பினர்.
இதனால், 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆகார்ஷித் கோமலுடன், சர்ஃப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்தத் தொடரின் கடந்த நான்கு இன்னிங்ஸில் ஒரு முச்சதம், ஒரு இரட்டைச் சதம் உட்பட 600க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து சிறப்பான ஃபார்மிலிருந்த அவர் நேற்றைய ஆட்டத்திலும் அபாரமாகவே விளையாடி சதம் விளாசி அசத்தினார்.
மறுமுனையில், நிதானமான ஆட்டத்தை கடைபிடித்த வந்த ஆகார்ஷித் கோமலும் சதம் விளாசினார். இந்த ஜோடி 275 ரன்களை சேர்த்த நிலையில், ஆகார்ஷித் கோமல் 122 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, மும்பை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 85 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 352 ரன்களை எடுத்துள்ளது. சர்ஃப்ராஸ் கான் 204 பந்துகளில், 22 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் உட்பட 169 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் களத்தில் உள்ளார். இதன்மூலம், இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சர்ஃப்ராஸ் கான் 914 ரன்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: 2011 உலகக் கோப்பை இறுதிச் சுற்றை நினைத்து சிலிர்க்கும் சச்சின்!