உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மொடீரா மைதானம் புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் 1.10 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற புகழை இது பெற்றது. இதற்கு முன்னர் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானமே, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கருதப்பட்டு வந்தது.
இந்நிலையில், சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த மைதானத்தின் பெயர் தற்போது ‘நரேந்திர மோடி’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று (பிப்.24) உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
இவ்விழாவின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு அருங்காட்சியகத்தையும், மொடீராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்துடன் இணைத்து, நாரன்புராவில் ஒரு விளையாட்டு வளாகமும் கட்டப்படும். இந்த மூன்று இடங்களிலும் அனைத்து வகையான சர்வதேச விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். இதன் மூலம் அகமதாபாத் இந்தியாவின் 'விளையாட்டு நகரம்' என்று அறியப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் இவ்விழாவில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு, குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உபுல் தரங்கா ஓய்வு!