இந்தியாவில் தற்போது உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் மிகவும் திறமையானவர் சஞ்சு சாம்சன். கேரளாவைச் சேர்ந்த இவர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பலரும் இவரது ஆட்டத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அசத்தினார்.
இதையடுத்து, தற்போது இந்திய அணியில் இருக்கும் விக்கெட் கீப்பர்களில் சிறந்த பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பிர் தெரிவித்திருந்தார். தற்போது நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் இவர் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி, இந்திய அணியின் தேர்வுக்குழுவினரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
கோவா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து, அணியின் கேப்டன் ராபின் உத்தப்பா, விஷ்ணு வினோத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேரள அணி 31 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், சச்சின் பேபியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி கோவா அணியின் பந்துவீச்சை போட்டிபோட்டுகொண்டு வெளுத்துவாங்கியது.
குறிப்பாக, சஞ்சு சாம்சன் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு இரட்டை சதம் அடித்து மிரட்டினார். மறுமுனையில், நேர்த்தியான ஆட்ட்ததை வெளிப்படுத்திய சச்சின் பேபி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் கேரள அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 129 பந்துகளில் 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என 212 ரன்களுடன் இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
சஞ்சு சாம்சன் படைத்த சாதனைகள்:
- இதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை அடித்த பாகிஸ்தான் வீரர் அபித் அலியின் சாதனையை (208 ரன்கள்) முறியடித்துள்ளார்.
- விஜய் ஹாசரே தொடரில் அதிக ரன்களை அடித்த உத்தரகாண்ட் வீரர் கே.வி. கவுஷாலின் (202 ரன்கள்) காலி செய்தார்.
- மேலும், லிஸ்ட் ஏ போட்டியில் அதிக ரன்களை அடித்த முதல் இந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
- ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் சாம்சன் பெற்றுள்ளார்.