2019ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றுவருகிறது. இதில், வி.பி காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தேர்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. டாஸ் வென்ற காஞ்சி அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து, அணியின் தொடக்க வீரர் சுரேஷ் லோகஷ்வர் டக் அவுட் ஆனதால் காஞ்சி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த நிலையில், மூன்றாவது வீரராக சஞ்சய் யாதவ் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் ஆறு ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான விஷால் வைத்தியா நான்கு ரன்களில் வெளியேறினார். பின்னர், வந்த கேப்டன் பாபா அபரஜித்தா (13), ஃபிரான்சிஸ் ரோகின்ஸ் (4) ராஜகோபால் சதீஷ் (17) ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, காஞ்சி அணி 60 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து ரன்குவிப்பில் தடுமாறியது.
இதனால், அணியை கரைசேர்க்கும் பொறுப்பு சஞ்சய் யாதவ் மீது விழுந்தது. இந்த நிலையில், மோகித் ஹரிஹரனுடன் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக, கடைசி இரண்டு ஓவரில் தனிஒருவராக மூன்று சிக்சர், இரண்டு பவுண்ட்ரி என மொத்தம் 30 ரன்களை சேர்த்தார். இதனால், காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.
இப்போட்டியில் சஞ்சய் யாதவ் 52 பந்துகளில் ஆறு பவுண்ட்ரி, நான்கு சிக்சர் என 77 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மதுரை அணி தரப்பில் அபிஷேக் தன்வார், ரஹில் ஷா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.