கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள், தங்களது நேரத்தை குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் செலவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றுவிட்டார் என்ற வதந்தி காட்டுத்தீயாய் பரவியது. ஆனால், அத்தகவல் உண்மையில்லை என்று தோனியின் மனைவி சாக்சி மற்றும் அவரது சிறு வயது பயிற்சியாளர் ஆகியோர் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்சி சிங் தோனி, ட்விட்டரில் வைரலான #DhoniRitire குறித்து பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சாக்சி, 'என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு குறுஞ்செய்தி மூலம் அங்கே என்ன நடக்கிறது. தோனி ஓய்வு பெறுவதாக மதியம் முதல் ட்விட்டரில் வைரலாகி வருகிறதே என்று என்னிடம் கேட்டார். அதன் பிறகுதான், ஏதோ நடந்துள்ளது என்று எனக்குத் தெரிந்தது. அதனால் உடனடியாக, நான் அந்த ட்விட்டை அழித்து விட்டேன்.
அதன் பிறகு தான், நான் எனது ட்விட்டரில், இது வெறும் வதந்தி மட்டுமே. இந்த ஊரடங்கினால் மக்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதுபோல என்று பதிவிட்டிருந்தேன்' எனத் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப்பின் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.