இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆளுமை சச்சின் டெண்டுல்கர். இந்திய அணி என்றவுடன் வேறு நாட்டு ரசிகர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது இவரின் பெயர்தான். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், கிரிக்கெட் உலகில் யாருமே தொட முடியாத அளவுக்கு பல சாதனைகளை செய்து குவித்தவர்.
இன்றளவும், இவரின் சாதனைகள் யாராலும் முறியடிக்க முடியாமல் தான் உள்ளன. சர்வதேச அளவில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் சச்சின். ஒருநாள் தொடரில் 200 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
இந்நிலையில், சச்சினுக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' எனும் உயரிய விருதை ஐசிசி இன்று வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
இவருடன் சேர்த்து தென் ஆப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்டுக்கும் இந்த கௌரவ விருதை ஐசிசி அளித்துள்ளது. சச்சினுக்கு முன்னதாக இந்திய அணியில் அணில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோர் இந்த விருதை வாங்கியுள்ளனர்.