இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு ட்ரஃபோர்டு மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கு பாகிஸ்தான் அணி 277 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
இதையடுத்து 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த இங்கிலாந்து அணியை, பட்லர் - வோக்ஸ் இணை சேர்ந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. வோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து அசத்தினார்.
வெற்றிக்குப் பின் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' தோல்வி பெறும் நிலையிலிருந்து வெற்றிப்பெற்றுள்ளோம். இது அணியின் மனநிலையைக் காட்டுகிறது. பட்லரின் திறமையை எங்கள் அணியினர் அனைவரும் நன்கு அறிவோம். சூழ்நிலைக்கு ஏற்ப ஆடுவதில் அவர் தேர்ந்த வீரராக வளர்ந்துள்ளார். உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்டோக்ஸ் - பட்லர் ஆகியோரின் பங்களிப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு அழுத்தமான சூழல்களில் எளிதாக ரன்கள் சேர்க்கக் கூடியவர்.
வோக்ஸ் தொடர்ந்து நிலைத்தன்மையுடன் விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானதிலிருந்து தொடர்ந்து நிலைத்தன்மையுடன் விளையாடி வருபவர் அவர். இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சுக் கூட்டணி வலிமையாக உள்ளது. எப்போதும் என்ன செய்ய வேண்டும், அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுபவர் வோக்ஸ். இவர்கள் இருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.
ஏனென்றால் ஒவ்வொரு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் தோல்வியடைந்து, பின் தொடரைக் கைப்பற்றுவது சவாலான ஒன்று. இதற்கிடையே இந்தத் தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் - சிஎஸ்கே