இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோகித் சர்மா நேற்று (ஆகஸ்ட் 2) தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துவந்தார். அப்போது ரசிகர் ஒருவர், கடந்த காலங்களில் இருந்து ஒரு பந்துவீச்சாளரை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என கேள்வி கேட்டார். இதற்கு ஹிட்மேன், மெக்ராத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள எனக்கு விருப்பம் என பதிலளித்தார்.
ஆஸ்திரேலியாவின் மெக்ராத், இந்தியாவின் ரோகித் சர்மா இருவரும் உலகக்கோப்பை தொடர்களில் சாதனை படைத்துள்ளனர். உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை (71) வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை மெக்ராத் படைத்துள்ளார். அதிலும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 2007 உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சமாக 26 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
1999 முதல் 2007 வரை டெஸ்ட், ஒருநாள் என இரண்டு விதமான ஃபார்மெட்டுகளிலும் ஆஸ்திரேலிய அணி கோலோச்சி இருந்ததற்கு மெக்ராத் அஸ்திவாரமாக இருந்தார். 124 டெஸ்ட் போட்டிகளில் 563 விக்கெட்டுகளும், 250 ஒருநாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
மறுமுனையில், ரோகித் சர்மா ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தத் தொடரில் இவர் ஐந்து சதங்களை விளாசி இந்தச் சாதனையை எட்டினார்.
33 வயதான ரோகித் சர்மா இந்திய அணிக்காக இதுவரை 224 ஒருநாள், 108 டி20, 32 டெஸ்ட் என மொத்தம் 14,029 ரன்களைக் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மூன்றுமுறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனி தன் கடைசி போட்டியை இந்தியாவுக்காக மகிழ்ச்சியாக ஆடிவிட்டார்: ஆஷிஷ் நெஹ்ரா