இந்திய கிரிக்கெட் அணியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் ரோஹித் ஷர்மா(ஹிட்மேன்). மும்பையை சேர்ந்த இவர், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 கிரிக்கெட் தொடர் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார். இந்தியா இந்த தொடரை வென்றதற்கு ரோஹித் ஷர்மாவுக்கும் முக்கிய பங்குண்டு.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், அவர் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினார். இதனால்தான் இந்திய அணி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து, அவர் 2013ஆம் ஆண்டு வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தாலும், அவரது திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது.
2013ஆம் ஆண்டில் இருந்துதான் ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் பயணம் முற்றிலும் மாற்றியது என்றே கூறலாம். அதற்கு முக்கிய காரணம் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் தோனிதான். ரோஹித் ஷர்மாவிற்குள் மறைந்து இருக்கும் திறமையை அவர், வெளி கொண்டு வந்தார்.
2013 சாம்பியன்ஸ் டிராஃபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவரை தோனி, தொடக்க வீரராக களமிறக்கினார். தோனியின் இந்த முயற்சியால், இந்திய அணிக்கு ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த தொடக்க வீரர் கிடைத்தார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு அணியில் அவருக்கென தனி முத்திரை பதித்தார்.
2013க்கு முன் 66 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12 அரைசதம் உட்பட 1978 ரன்களை மட்டுமே அடித்த அவர், அதன்பின் 120 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 29 அரைசதம், 20 சதம் என 6032 ரன்களை குவித்துள்ளார். அதில், மூன்று இரட்டை சதமும் அடங்கும்.
இந்திய அணியில் சேவாக் எந்த அளவிற்கு ஓப்பனிங்கில் அதிரடியாக விளையாடுவாரோ அந்த அளவிற்கு இவரும் அதிரடியாக விளையாடினார். ஆனால், தான் களத்தில் செட் ஆகுவதற்கு ரோஹித் ஷர்மா நேரம் எடுத்துக்கொள்வது மட்டும்தான் இருவருக்குள் இருக்கும் வித்தியாசம்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 70 முதல் 80 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அடக்கி வாசிக்கும் இவர், அதன்பின் பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுக்கும் வல்லமை பெற்றவர். இதனால்தான், இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்றுமுறை இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
தனது திருமண நாளான 13 டிசம்பர் 2017இல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக இரட்டை சதம் விளாசியது அவருக்கும், அவரது மனைவி ரித்திகாவிற்கும் கிடைத்த டபிள் கிஃப்ட்.
சதம் விளாசியப் பின் இவர் எடுக்கும் அக்ரஸிவ் மொட், யவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனால், இவருக்கு ரசிகர்கள் ஹிட்மேன் என செல்லப்பெயரை வைத்தனர்.
குறிப்பாக, இந்திய அணியில் புல் ஷாட்டை நேர்த்தியாக விளையாடும் ஒரே வீரர் இவர்தான். ஒரு பந்தை, ஸ்ட்ரைட், கவர், மிட் விக்கெட், தேர்டு மேன், ஸ்கொயர் லெக் என அனைத்து திசைகளிலும் ஷாட் அடிக்கக் கூடிய திறமை இவருக்கு இருக்கிறது என இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரோஹித் ஷர்மா தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் ஷர்மா இதுவரை இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 206 ஒருநாள், 94 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 11,926 ரன்களை குவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2013இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராஃபி தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு எவ்வாறு இவர் காரணமாக இருந்தாரோ, அதேபோல, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான தொடக்கத்தை தருவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.