ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் ஏற்கெனவே ஆஸ்திரேலியா சென்று தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளனர்.
விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இந்தியா திரும்பிவிடுவார். ஆஸ்திரேலியாவுக்கு வருகைதருபவர்கள் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால் கோலி அதன் பிறகு கடைசி கட்ட டெஸ்ட்டுக்கான அணியுடன் இணைய வாய்ப்பில்லை.
இதன் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா, சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின்போது காயமடைந்தார். இதனால் அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெற்றுள்ளார்.
இதையடுத்து தயாகம் திரும்பியுள்ள ரோஹித் சர்மா, ஓரிரு வாரங்கள் கழித்து இந்திய அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் ரோஹித் சர்மாவின் உடற்தகுதியை மேம்படுத்த பயிற்சியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ரோஹித் இன்று தேசிய கிரிக்கெட் அகாதமிக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு உடற்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மேலும் கிரிக்கெட் அகாதமியின் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து ரோஹித்தின் உடற்தகுதியை காண்காணிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.