இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றுவருகிறது. இதில், ஃபாலோ- ஆன் பெற்று மீண்டும் பேட்டிங் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்துள்ளது. டீ ப்ரூயின் 30 ரன்கள், அன்ரிச் ஐந்து ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர்.
இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இதனிடையே, இன்றைய மூன்றாம் ஆட்டநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஹா காயம் காரணமாக வெளியேறினார். அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 26ஆவது ஓவரின்போது அவரது வலதுகையில் காயம் ஏற்பட்டது.
இதனால், அவருக்குப் பதிலாக ஐசிசி புதிதாக கொண்டுவந்த மாற்று வீரர் விதிப்படி ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஐசிசி கொண்டுவந்த விதிமுறையை பல்வேறு அணிகளும் பயன்படுத்திவரும் நிலையில், தற்போதுதான் இந்திய அணி முதல்முறையாக பயன்படுத்தியது.
அதேசமயம், இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டார். 10ஆவது ஓவரின்போது 132 கிலோமீட்டர் வேகத்தில் உமேஷ் யாதவ் வீசிய பந்தே அவரது தலையை பதம்பார்த்து. இதனால், நிலைத்தடுமாறிய எல்கர் பெவிலியினுக்குத் திரும்பினார்.
இதையடுத்து, ஐசிசியின் மாற்று வீரர் விதிமுறைப்படி அவருக்குப் பதிலாக டீ ப்ரூயின் பேட்டிங்கில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிராட்மேனை ஓரம்கட்டிய ஹிட்மேன்