அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே, ஆர்சிபி, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் ஏலத்திற்கு முன்பாகவே சில வீரர்களை அணியிலிருந்து விலக்கியுள்ளது.
அந்த வரிசையில் இருமுறை ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா அணி - கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, பியூஸ் சாவ்லா உள்ளிட்ட வீரர்களை ஏலத்திற்கு முன்பாகவே நீக்கியுள்ளது. இதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷயம் கிறிஸ் லின்னின் நீக்கமே.
2014ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவந்த இவர், கடந்த சீசனில் கூட 13 போட்டிகளில் 405 ரன்களை விளாசியிருந்தார். இந்நிலையில் இவரின் நீக்கம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.
நேற்று டி10 போட்டிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த யுவராஜ் சிங், "கிறிஸ் லின் ஐபிஎல்லில் நான் பார்த்த ஒருவர். அவர் கேகேஆருக்கு பலமுறை சிறந்த தொடக்கத்தை வழங்கியுள்ளார். அவர்கள் ஏன் அவரைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இது மிகவும் மோசமான முடிவு என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று நடைபெற்ற டி10 கிரிக்கெட் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் கிறிஸ் லின் 30 பந்துகளில் 90 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டீம் ரகசியத்தை வெளியிட்ட ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு ஓராண்டு தடை