இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தவர் அம்பதி ராயுடு. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்கும் நான்காவது வரிசை பிரச்னையை ஓரளவிற்கு சரிசெய்தவர் ராயுடு. இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ராயுடு, இதுவரை 1694 ரன்களை எடுத்துள்ளார். 33 வயதான ராயுடு, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத காரணத்தால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதன்பின், பதற்றத்தில் தான் இந்த முடிவை எடுத்ததால், ஓய்வை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார். அதோடுமட்டுமில்லாமல், விஜய் ஹசாரே எனும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஹைதராபாத் அணியில் தன்னை சேர்த்துகொள்ளுமாறும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டொரன்மென்டில், ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதிவரை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட ஹைதராபாத் அணியின் கேப்டனாக அம்பதி ராயுடு நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவு அனைவரையும் சர்ப்ரைஸ் செய்யும்படி அமைந்துள்ளது. இந்தத் தொடரில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட் ஆகிய அணிகளுடன் ஹைதராபாத் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் போட்டியில் ஹைதராபாத் - கர்நாடாகா அணிகள் மோதவுள்ளன. ராயுடு தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாதல், இப்போட்டியில் அவரது பேட்டிங் ப்ளஸ், கேப்டன்ஷிப் இரண்டின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஹைதராபாத் அணி விவரம்: அம்பதி ராயுடு (கேப்டன்), பி. சந்தீப், அக்ஷத் ரெட்டி, டன்மே அகர்வால், தகூர் வர்மா, ரோகித் ராயுடு, சி வி மிலிண்ட், மெஹதி ஹாசன், சகீத் சாய்ராம், முகமது சீராஜ், மிக்கில் ஜெய்ஸ்வால், ஜெ. மல்லிகார்ஜூன், கார்த்திகேயா, ரவி தேஜா, ஆயா தேவ் கவுட்