உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகும், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ரவி சாஸ்திரி மீண்டும் இரண்டாவது முறையாக தக்க வைத்து கொண்டுள்ளார். கபில் தேவ் தலைமையிலான குழு இவரது ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. முந்தைய ஒப்பந்தத்தின்படி ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இவரது புதிய ஒப்பந்தம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததால், இவரது ஊதியத்தில் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இனி ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் இவர் ஊதியம் பெறவுள்ளார். அவருடன் பந்துவீச்சு பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட பரத் அருணுக்கு 3.5 கோடி ரூபாயும், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதருக்கு 2.5 கோடி முதல் 3 கோடி வரையும் ஆண்டு வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
![Ravi Shastri](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4397430_rvs.jpg)
ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் இந்திய அணி 2015 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், 2016 டி20 உலகக்கோப்பை தொடர், 2019 உலகக்கோப்பை ஒருநாள் தொடர் ஆகியவற்றில் அரையிறுதிப் போட்டி வரை மட்டுமே சென்றது. இதுமட்டுமின்றி, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வெற்றிபெற வேண்டிய டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இருப்பினும், 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக நியமக்கப்பட்டதையே ஜீரணித்து கொள்ள முடியாத ரசிகர்களுக்கு, தற்போது அவரது ஊதிய உயர்வு மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 கோடிக்கு அவர் தகுதியானவரா என்றும் சமூக வலைதளங்களில் அவர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.