இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேசிய கிரிக்கெட் சங்கத்தில் தலைவருமாக இருப்பவர் ராகுல் டிராவிட். இவர் தனது பேட்டிங் திறமையினால் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்றழைக்கப்பட்டார்.
இவரது மகனான சமித் டிராவிட், 14 வயதுக்குள்பட்டோருக்கான குரூப் 1, டிவிஷன் 2 தொடரில் மல்யா அதிதி இன்டர்நேஷனல் அணிக்காக விளையாடிவருகிறார்.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற ஸ்ரீகுமரன் சில்ட்ரென் அகாதமி அணிக்கு எதிரான போட்டியில் சமித் டிராவிட் 146 பந்துகளில் இரண்டாவது இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதில், 33 பவுண்டரிகளும் அடங்கும்.
சமித் டிராவிட்டின் சிறப்பான ஆட்டத்தால் மல்யா அதிதி இன்டர்நேஷனல் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 377 ரன்களைக் குவித்தது. இதைத்தொடர்ந்து, களமிறங்கிய ஸ்ரீகுமரன் சில்ட்ரென் அகாதமி அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால், மல்யா அதிதி இன்டர்நேஷனல் அணி இப்போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் அன்று நடந்த 14 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியிலும் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இரட்டை சதம் அடித்திருந்தார்.
இரண்டு மாதங்களிலேயே இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த டிராவிட்டின் மகனை மனி வால் என ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டின் பிகாசோ! #RAHULDRAVID