சர்வதேச கிரிக்கெட்டில் சில வருடங்கள் மட்டுமே நிலைக்க முடிந்தாலும், உள்ளூர் போட்டிகளில் என்றுமே ஜாம்பவான் வீரர் வாசிம் ஜாஃபர். 24 வருட ரஞ்சி டிராபி கிரிக்கெட் வாழ்க்கையில் இவர் படைக்காத சாதனைகளே இல்லை என்ற அளவிற்கு சாதனைகளை படைத்துள்ளார்.
இவர் ரஞ்சி டிராபியில் எவ்வளவு சிறப்பாக ஆடி ஃபார்மை நிரூபித்தாலும், இந்திய அணியில் இவருக்கு மீண்டும் இடம்கிடைக்கவேயில்லை. சமீபத்தில் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த வாசிம் ஜாஃபர், தனியார் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ''எனக்கு சரியான முறையில் ஃபேர்வெல் நடந்திருக்க வேண்டும், மரியாதை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என பலரும் பேசுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களான டிராவிட், லக்ஷ்மண் ஆகியோருக்கே இந்திய அணியால் மரியாதை வழங்கப்படவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் ஒவ்வொரு வீரருக்கும் அணியிலிருக்கும் அனைத்து வீரர்களின் முக்கியத்துவம் தெரியும். ஆனால் இது டி20 கிரிக்கெட் காலம். மார்க்கெட்டிங், விளம்பரங்கள் உள்ளிட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு மக்களை ஈர்க்கும் கிரிக்கெட்டர்களும், அழகான வீரர்களுமே தேவைப்படுகிறார்கள். டி20 கிரிக்கெட்டிற்கு தான் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதற்காக டி20 கிரிக்கெட் ஆடும் வீரர்களை தவறாக கூறவில்லை. அவர்களின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் கிரிக்கெட்டர் என்பவர் மூன்று வகையான போட்டிகளுக்கும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் ஆடுபவர் டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆடக்கூடாது. டி20 வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டின் நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் சரியாக அடையாளப்படுத்தப்படுவார்'' என்றார்.
இதையும் படிங்க: இந்த தசாப்தத்தில் விடைபெற்ற 90'ஸ் கிட்ஸ்களின் கிரிக்கெட் ஹீரோக்கள்! #10YearsofCricket