போட்டிகள், பயிற்சிகள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் விளையாட்டு வீரர்கள் தற்போது கரோனா வைரஸ் காரணமாக தங்களது வீட்டில் முடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்தச் சூழலில் வீட்டில் தனது குடும்பங்களுடன் இருக்கும் இந்திய வீரர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக மற்ற நாட்டைச் சேர்ந்த வீரர்களுடன் உரையாடிவருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பாலுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினார். இதில், சேஸின் போது தனது மனநிலை குறித்தும், அந்நிய மண்ணில் ரன்கள் குவிக்க தான் பேட்டிங் செய்யும் முறை மாற்றுவது குறித்தும் கோலி பேசினார்.
இந்நிலையில், வேகபந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் மேம்படுத்தி உதவியது குறித்து கோலி மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "2013ஆம் ஆண்டிலிருந்து வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும்போது இந்திய பேட்ஸ்மேன்களின் திறன் முன்னேற்றம் அடைந்ததற்கு பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த பந்துவீசும் நிபுணர் (த்ரோடவுன் ஸ்பெஷாலிஸ்ட்) ரகுதான் மிக முக்கிய காரணம்.
பேட்டிங் வலைபயிற்சியின் போது அவர் பந்தை மணிக்கு 150 முதல் 155 கிலோமீட்டர் வேகத்தில் சைட் ஆர்ம் மூலமாக வீசுவதன்மூலம் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகபந்துவீச்சுகளை சிறப்பாக எதிர்கொள்ள உதவும். குறிப்பாக வேகபந்துவீச்சில் பேட்ஸ்மேன்களின் ஃபுட்ஒர்க், அவர்களது பேட் ஸ்விங் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவருக்கு நன்கு தெரியும். வலைபயிற்சியில் இவரது பந்துவீச்சை எதிர்கொண்ட பிறகு, போட்டியில் விளையாடும்போது பந்துவீச்சை எதிர்கொள்ள உங்களுக்கு போதுமான நேரம் கிடைப்பதாக நீங்கள் உணர்வீர்கள்" என்றார்.
இதையும் படிங்க: 6 சிக்சர்கள் அடித்ததற்கான காரணம் என்ன? - ரகசியத்தை உடைத்த யுவி