கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) சிறப்பான ஆல்-ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வைஸ் என்பவரால், முல்தான் சுல்தான்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியிடம் சரணடைந்தது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில், நேஷனல் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) இரவு நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், லாகூர் கலந்தர்ஸ், முல்தான் சுல்தான்ஸ் அணிகள் சந்தித்தன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ், லாகூர் கலந்தர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தன. சிறப்பாக பந்து வீசிய ஷாகித் அப்ரிதி இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.
அதிரடி காட்டிய டேவிட் வைஸ், 21 பந்துகளில் கடைசி வரை அவுட் ஆகாமல் 48 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் 19.1 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் வைஸ் வெறும் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிலையில் நவ.17ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
இதில், லாகூர் கலந்தர்ஸ் அணி, கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: 'ஐபிஎல் பேட்ஸ்மேன்களுக்கானது; பிஎஸ்எல் பவுலர்களுக்கானது' - சைனாப் அப்பாஸ்