இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்து தொடக்க வீரராகக் களமிறங்கி சதம் விளாசினார். அதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகினார். பின்னர் ஊக்கமருத்து சர்ச்சையில் சிக்கி, எட்டு மாதங்கள் கிரிக்கெட் ஆடுவதற்கு தடை செய்யப்பட்டார்.
பின்னர் அந்த தடை கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உடனடியாக உள்ளூர் போட்டிகளில் களமிறங்கி தனது ஃபார்மை நிரூபித்தார். இருந்தும் அணியில் ஆடும் அனைத்து இடங்களிலும் சரியான வீரர்கள் இருந்ததால் இந்திய அணியில் இடம்கிடைக்காமல் இருந்தது.
இதனிடையே நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக சிறப்பாக ப்ரித்வி ஷா ரன்கள் சேர்த்திருந்தார். இந்திய அணி நியூசிலாந்திற்கு பயணம் செய்வதற்கு முன்னதாக ஷிகர் தவான் காயம் காரணமாக விலக, அந்த இடத்தில் ப்ரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டார். இருந்தும் ஆடுன் லெவனில் இடம்கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
பின்னர் டி20 தொடரின்போது ரோஹித் சர்மா காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற, ப்ரித்வி ஷாவுக்கு ஆடும் லெவனில் இடம்கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது. இன்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஒருநாள் தொடரிலிருந்து ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியது துரதிஷ்டவசமானது. அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த மயாங்க் அகர்வால் மற்றும் இளம் வீரர் ப்ரித்வி ஷா இருவரும் நாளை தொடங்கவுள்ள ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டரில் களமிறங்குவார்'' எனக் கூறினார்.
கோலி கூறியதுபோல் ப்ரித்வி ஷா நாளையப் போட்டியில் களமிறங்கினால், சர்வதேச கிரிக்கெட்டில் 16 மாதங்களுக்கு பிறகு களமிறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை’