இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்ததால் ப்ரித்வி ஷா அணியிலிருந்து விலகினார். அதையடுத்து தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியதால், பிசிசிஐ-ஆல் 8 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை முடிந்த நிலையில், தற்போது ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்று அதிரடியாக ரன்களைக் குவித்தார். இதன் பலனாக இந்த மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியில் இடம் கிடைத்தது.
இதனிடையே இன்று மும்பை - கர்நாடகா அணிகள் மோதிய ரஞ்சி டிராபி போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதில் ரஹானே 7, ப்ரித்வி ஷா 29, கேப்டன் சூர்ய குமார் யாதவ் 77 ஆகிய ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய கர்நாடக அணி வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது மும்பை அணியின் ஃபீல்டிங்கின்போது ஓவர் த்ரோ சென்ற பந்தை பிடிக்க ப்ரித்வி ஷா முயற்சித்தார், இதில் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் களத்திலிருந்து ப்ரித்வி ஷா வெளியேறினார். இதுகுறித்து மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், ப்ரித்வி ஷா தற்போது நலமாக உள்ளார். ஆனால் காயத்தின் தன்மை குறித்து அணியின் பிசியோதெரபிஸ்ட்டிடம் பேசியபின்தான் தெரியவரும் என்றார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடக அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய ஏ அணி நியூசிலாந்து தொடருக்கு பயணம் மேற்கொள்ள இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், ப்ரித்வி ஷாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஊக்க மருந்து சர்ச்சையில் ப்ரித்விக்கு 8 மாதம் தடை-பிசிசிஐ