இந்திய அணி 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் பிரவீன் குமார். அந்தத் தொடரின் மூலம் பெரிய அளவிலான கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.
இந்திய அணிக்காக இறுதியாக 2012இல் விளையாடிய அவர் அதன் பின் தொடர் காயம் காரணமாகவும் அதேசமயம் அணியில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரது வருகையின் காரணமாகவும் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே பிரவீன் குமார், தனது நடவடிக்கைகளாலும் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
இந்நிலையில், பிரபல ஆங்கில இதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரவீன் குமார் தன் வாழ்நாளில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசியிருந்ததாவது:
இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனதால் மிகுந்த மனவேதனையில் இருந்தேன். அப்போது எனது வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை என்னிடமே கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது கடந்தாண்டு நவம்பர் மாதம், ஒரு நள்ளிரவன்று ஹரித்வாரை நோக்கி காரில் எனது பயணத்தை தொடங்கினேன்.
அப்போது போகும் வழியில் எனது கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்தேன். அச்சமயத்தில் காரிலிருந்த எனது குழந்தைகளின் புகைப்படத்தை நான் பார்க்க நேரிட்டதால் எனது முடிவை மாற்றிக்கொண்டேன். எனது குழந்தைகளின் வாழ்க்கையை நரகமாக மாற்றிவிடக் கூடாது என்று திரும்பிவிட்டேன்.
அதன்பின் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இந்தியாவில் யாரும் அதை ஒரு பெரிய நோயாக கருதுவதில்லை. என்னிடம் மனம் விட்டு பேச யாரும் இல்லை என்பதால் எரிச்சலடைந்தேன்.
மேலும், என்னை ஒரு குடிகாரன் என்ற தவறான செய்தியை மக்கள் மனதில் விதைத்துவிட்டனர். ஏன் இது போன்ற தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. நான் குழந்தைகளுக்கு உதவியது, ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தது, கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி உதவி செய்தது போன்ற நான் செய்யும் நல்ல காரியங்களை யாரும் வெளியில் சொல்வதில்லை.
எனது வலது கண்ணில் பார்வைக் குறைபாடு உள்ளது. அது இந்திய அணியின் தற்போதைய துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்குத் தெரியும். இந்தக் குறைபாட்டால் என்னால் பந்தைச் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.