இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2008ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், நடுவர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாகவும், இந்திய அணிக்கு பாதகமாகவும் தீர்ப்புகளை வழங்கினர். அந்தப் போட்டியில் கள நடுவர்களாக இருந்த ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் ஆகியோரது இந்த செயலால் இந்திய அணி தோல்வியுற்றது.
இது ஒரு பக்கம் இருக்க இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸை குரங்கு என இனவெறி ரீதியாக திட்டியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் குற்றஞ்சாட்டியதால் பெரும் சர்ச்சையானது. அதன் விளைவாக ஹர்பஜன் சிங்கிற்கு மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்தது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் நடந்தது குறித்து நினைவுக்கூர்ந்த ஹர்பஜன் சிங், "அந்தப் போட்டியில் ரிக்கி பாண்டிங், தான் சொல்வதுதான் தீர்ப்பு என நடுவரைப்போல் நடந்துகொண்டார். களத்தில் நடக்கும் விஷயங்கள் அல்லது சம்பவங்கள் அது களத்திலேயே முடிய வேண்டும் என ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் எனக்கும் சைமண்ட்ஸூக்கும் இடையிலான பிரச்னை களத்திற்கு அப்பாற்பட்டது. அந்த சம்பவத்தின்போது நானும் சைமண்ட்ஸும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். எங்களுக்கு அடுத்தப்படியாக டெண்டுல்கரைத் தவிர வேறு யாரும் நெருக்கமாக இல்லை.
ஆனால் விசாரணை தொடங்கியபோது, ஹெய்டன், கில்கிறிஸ்ட், மைக்கேல் கிளார்க், ரிக்கி பாண்டிங் ஆகிய நான்கு பேரும் நான் சைமண்ட்ஸை குரங்கு என திட்டியது அவர்களது காதில் கேட்டதாக் கூறினர்.
அந்த சம்பவத்தின்போது எங்களுக்குள் என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரியாது. இவ்வளவு ஏன் சச்சினுக்குக்கூட எங்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்றே தெரியாது.
உண்மையில் நாங்கள் என்ன பேசிக்கொண்டோம் என்பது எனக்கும் சைமண்ட்ஸூக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த விவகாரத்தில் நான் சதித்திட்டத்தால் பலிகடா ஆனேன். விசாரணையின்போது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பயமாகவே இருந்தது.
ஆஸ்திரேலிய ஊடகங்கள் என்னை மைக்கேல் ஜாக்சனைப் போன்று, கேமராக்களால் துரத்தினர். ஆனால் இந்த விவகாரத்தில் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளேவும், இந்திய அணியும் எனக்கு ஆதரவாக துணையிருந்தனர்" என தெரிவித்தார்.