உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் முடிவடைந்து இந்திய அணி அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகிவருகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது. உலகக்கோப்பைத் தொடரில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக கேப்டன்சியை பிரித்து டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியும், ஒருநாள், டி20 போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மாவும் கேப்டன்சி பொறுப்பை மேற்கொள்வார்கள் என பேசப்பட்டது.
ஆனால் பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் மீண்டும் மூன்று வகையான போட்டிகளுக்கும் விராட் கோலியே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் விமர்சகர்கள், முன்னணி வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது தோனி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததும், அப்போது இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருந்த விராட் கோலி எந்தவித எதிர்ப்புமின்றி முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கேப்டனாக அறிவிக்கப்பட்டு விளையாடிய மூன்று போட்டிகளிலும் ரன்களை அடித்து நொறுக்கினார். கேப்டன்சி ப்ரஷர் விராட் கோலியின் பேட்டிங்கை பாதிக்கும் என கருதியவர்களுக்கு சம்மட்டி அடி விழுந்தது.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கங்குலி உருவாக்கிய அணி, தோனி தலைமையில் ஆடியதுடன் உலக சாம்பியன் மகுடத்தையும் சூடியது. அதன் பிறகு முழுக்க முழுக்க 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு புதிய திறமைகளை அடையாளம் காட்டினார் முன்னாள் கேப்டன் தோனி. அப்போது தோனி என்னும் வீரரை கடந்து பார்த்தால் அனைத்து வீரர்களும் சிறிய வீரர்களே.
அந்த தொடரின் தோல்விக்கு பின் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். அப்போது விராட் கோலி கேப்டனாகவும், அவருக்கு ரோஹித் ஷர்மா துணை கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளில் ரஹானே துணை கேப்டனாகவும் அறிவிக்கப்படுகின்றனர்.
அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அப்போது முழுக்க முழுக்க பேட்டிங்கில் விராட் கோலி ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். கேப்டன்சியிலும் உள்நாட்டு தொடர்களை தோனி அடையாளம் காட்டிய வீரர்களோடு வென்றுவந்தார். ஆனால் இந்திய அணிக்குள் விராட் கோலி - கும்ப்ளே இடையிலான யுத்தம் தீப்பொறிகளோடு யாருக்கும் தெரியாமல் நடைபெற்றுவந்தது.
அப்போது இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, அந்த அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி விலகுகிறார். இதனால் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்கிறார்.
அந்த போட்டியில் பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு பதிலாக மற்றொரு நல்ல பேட்ஸ்மேனை களமிறக்கலாம் என விராட் கோலி கூற, பயிற்சியாளர் கும்ப்ளே - ரஹானே கூட்டணி சைனாமேன் பவுலரான குல்தீப் யாதவை களமிறக்குகிறார்கள்.
அந்த போட்டியில் குல்தீப் யாதவ் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அத்தோடு இந்திய அணியின் உள்நாட்டு தொடர் முடிவடைகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி செல்கிறது. அனைத்து அணிகளையும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைய, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று மகுடம் சூடுகிறது. சரி, ஏதோ ஒரு தவறால் இந்திய அணி ஆட்டம் கண்டுவிட்டது என நினைத்து முடிப்பதற்குள், பயிற்சியாளர் கும்ப்ளே அணியிலிருந்து விலகுகிறார். விராட் கோலி - கும்ப்ளே இடையில் ஆறு மாதங்களாக பேச்சு வார்த்தையே இல்லை என செய்திகள் வருகிறது. மீண்டும் இந்திய அணியில் குழப்பம்.
இந்த குழப்பம் முடிவதற்குள் ரவி சாஸ்திரி தான் பயிற்சியாளராக வேண்டும் என அடம்பிடித்து இந்திய அணிக்குள் சாஸ்திரியை கோலி கொண்டுவருகிறார். பின்னர் புதிய பயிற்சியாளர் தலைமையில் இந்திய அணி கட்டமைக்கப்படுகிறது. தோனி அடையாளம் காட்டிய வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரெய்னா ஆகியோர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓரம் கட்டப்படுகின்றனர். புதிய பவுலர்களாக குல்தீப் யாதவ், சாஹல் வருகிறார்கள். அதேபோல் அனைத்து போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா என்னும் ஆல்-ரவுண்டர் இல்லாமல் இந்திய அணி களமிறங்காது என்ற சொல்லப்படாத விதி இருப்பது போல் அனைத்து போட்டிகளிலும் ஹர்திக் களமிறக்கப்படுகிறார்.
கோலி என்னும் சாமர்த்தியன்:
கோலி கேப்டன்சி திறமை பற்றி ஆஹா ஓஹோ என அனைவரும் பாராட்டுகையில், கங்குலி மட்டும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவில் விராட் கோலியின் செயல்பாடுகளை வைத்தே அவருடை கேப்டன்சியை மதிப்பிட முடியும் என பதில் கூறினார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக வெற்றிபெறுகிறார்.
தென்னாப்பிரிகாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் ரஹானே பெஞ்சில் உட்கார வைக்கப்படுகிறார். இதனால் தொடரை இழந்தது தான் மிச்சம். அதேபோல் ரஹானேவுக்கு அடுத்த இங்கிலாந்து தொடரில் புஜாரா பெஞ்சில் உட்காரவைக்கப்படுகிறார். மீண்டும் இங்கிலாந்து தொடரில் தோல்வி.
பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டது. எந்த அணியிலிருந்து புஜாரா, ரஹானேவை நீக்கினார்களோ அவர்களே முன்நின்று இந்திய அணி வரலாறு படைக்க காரணமாகினர். அந்த தொடரிலும் ஒரு ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டு கடைசி போட்டியில் சதம் விளாசியதால் சிறந்த வீரர் என கோலியால் புகழப்பட்டார். ஆனால் ரிஷப் பண்ட் சிறந்த வீரர் என்றால் கடைசி போட்டிக்கு முன்னதாக ஒரு நல்ல இன்னிங்ஸை கூட ஆடாதது ஏன் என கேள்வி எழவில்லை. ஏனென்றால் ரிஷப் பண்ட் இளம் வயது வீரர் என்பதால் விட்டுவிட்டோம்.
இதேபோல் தான் ஒவ்வொரு முறை ஒருநாள் தொடரில் பங்கேற்றபோதும் ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரஹானே, யுவராஜ் சிங், சில போட்டிகளில் தினேஷ் கார்த்திக், 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் ராயுடு, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ரிஷப் பண்ட் என நான்காவது இடத்திற்கான வீரரை அடையாளம் காண இத்தனை வீரர்கள் பரிசோதிக்கப்பட்டும் யாரும் பெரிய நம்பிக்கையை கொடுக்கவில்லை எனக் கூறினர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் போதுமான நம்பிக்கையை கோலி அளிக்கவில்லை என்பதை சொல்ல மறந்துவிட்டோம்.
இத்தனை வருடங்களாக கேப்டன் பொறுப்பில் இருக்கும் கோலி, அணியில் ஒரு நிலையாமையை ஏற்படுத்தி வந்துள்ளார். முழுக்க முழுக்க அணி அவரை நம்பியும், அவரது கட்டுப்பாட்டிலும் தான் இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிவந்தார். ஒரு வீரர் ஒரு தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால் ராகுலையும், ரிஷப் பண்ட்டையும் காப்பாற்றிய கோலி, ரஹானேவையும், ராயுடுவையும், தினேஷ் கார்த்திக்கையும் நம்ப மறுக்கிறார்.
அவருக்கு ஜால்ரா போடும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியும், திறமையான வீரர்களுக்கு ஒரு சில போட்டிகளில் மட்டும் வாய்ப்பு கொடுத்து கழற்றிவிடப்பட்டுள்ளனர். தோனியை ஐந்தாவது வீரராக மட்டுமே களமிறக்குவேன் என அடம்பிடித்து யாருடைய சொல்லுக்கும் செவி கொடுக்காமல் பந்தய குதிரையாக வலம் வந்த கோலி, உலகக்கோப்பையை தாரை வார்த்து கொடுத்துவிட்டார்.
உலகக்கோப்பைத் தொடரின்போது, அத்தனை வருடங்களாக ஆடிய தினேஷ் கார்த்திக்கை விடுத்து விஜய் சங்கரை களமிறக்கியது. ராயுடுவுக்கு பதிலாக ரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்று ஆடியது. இயற்கையாக தேர்வான தினேஷ் கார்த்திக்கை தவிர்த்துவிட்டு ரிஷப் பண்ட்டை இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறக்கியது, ஹர்திக் பாண்டியாவை ஆல்-ரவுண்டர் என நம்பினால் ஆறாவது பந்துவீச்சாளராக கேதார் ஜாதவை ஏன் அணியில் தொடர்ந்தார் என்ற கேள்வியை தவிர்ப்பது என உலகக்கோப்பை தொடர் வரை கோலியின் ஆட்டம் யாருடைய கண்களிலும் படாமல் இருந்தது.
ஆனால் உலகக்கோப்பையை இழந்ததையடுத்து தான் கோலியின் கேப்டன்சி குறித்த கேள்விகள் எழத்தொடங்கி, கேப்டன்சி பொறுப்பு ரோஹித் ஷர்மா, கோலி ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்படும் என பேசப்படும் அளவிற்கு வந்துள்ளது. கோலிக்கு ஏற்றவாறு கோலியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலிக்கு ஏற்ற தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் என அனைவரும் கோலிக்கு ஒத்தூதுபவர்களாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
சச்சின் கேப்டனாக இருந்தபோது பேட்டிங்கில் தனி ராஜாங்கமே நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் அணி அவரை நம்பியே இருந்தது. தோல்விகளால் சச்சின் கேப்டன் பதவியிலிருந்து வெளியேறினார். ஆனால் கோலிக்கு சிறந்த அணி கிடைத்ததால் அவருடைய கேப்டன்சி தவறுகள் வெளியில் தெரியவில்லை. அணி வெற்றிபெற்றுவிட்டது என்னும் ஒற்றை வார்த்தையில் கடந்துபோய்விடுகிறோம். ஆனால் கங்குலி, தோனி செய்ததற்கு அருகில் கூட கோலி இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை.
புதிய வீரர்களை கண்டறிந்து வாய்ப்புகளைத் தொடர்ந்து கொடுத்து திறமைகளை வளர்ப்பது. உதாரணமாக யுவராஜ், ஹர்பஜன், கும்ப்ளே, சேவாக் ஆகியோரை கங்குலி எப்படி பாதுகாத்து கொண்டு வந்தாரோ அதேபோல் தான் தோனி பலரையும் பாதுகாத்து வந்தார். ஆனால் கோலியின் பாலிசி என்பது வேறாக உள்ளது. ஒரு இடத்திற்கு பல வீரர்களை சோதனை செய்வது, வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்காமல் நிலையாமையை உண்டாக்குவது என வேறு முறையை கையாளுகிறார்.
இது இந்திய கிரிக்கெட்டை குழி தோண்டி புதைத்துவிடும். கோலிக்கு பிறகு ரோஹித் ஷர்மாவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் குறைவான போட்டிகளிலேயே ஆடியுள்ளனர் என்பதால் கோலியின் ராஜ்ஜியம் தொடர்ந்து வருகிறது. இதற்கு கடிவாளமாய் பயிற்சியாளர் தான் இருக்க வேண்டும். ஆனால் அவரும் கோலி அடிவருடியாக உள்ளார்.
இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பயிற்சி காலம் முடிவடைய உள்ளது. புதிய பயிற்சியாளராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் கோலிக்கு கடிவாளம் போடுபவராக வர வேண்டும். இல்லையென்றால் இந்திய கிரிக்கெட்டின் வாழ்வு மலையின் உச்சிக்கும் செல்லும், அதள பாதாளத்திற்கும் செல்லும். பார்க்கலாம் புதிய பயிற்சியாளர் என்ன செய்வார் என்பதை...!