கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக (பிங்க் பால்) நடைபெற்றுவருகிறது. இதில், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 136 ரன்கள் அடித்தார்.
இதைத்தொடர்ந்து, 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 13 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து ரன்குவிப்பில் தடுமாறியபோது, முஷ்பிகுர் ரஹிம் - மஹமதுல்லா ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.
41 பந்துகளில் ஏழு பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்த மஹமதுல்லா தசைப் பிடிப்பு காரணமாக ரிடயர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த மெஹிதி ஹசனுடன் ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹிம் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 50 ரன்களை சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் 15 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
இதையடுத்து, 33ஆவது ஓவரின் போது தைஜூல் இஸ்லாம் 11 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், வங்கதேச அணி 33.3 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தபோது இரண்டாவது ஆட்டநாள் முடிவுக்கு வந்தது. முஷ்பிகுர் ரஹிம் 59 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய அணி தரப்பில் இஷாந்த ஷர்மா நான்கு, உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இன்று மூன்றாம் ஆட்டநாளை தொடக்கவுள்ளது. இதில், வங்கதேச அணி தாக்குப்பிடித்து இந்திய அணிக்கு டார்கெட் செட் செய்யுமா அல்லது அல்லது 89 ரன்கள் அடிக்க முடியாமல் இன்னிங்ஸ் தோல்வி அடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.