விளையாட்டுப் போட்டிகளில் நேர்மையாக நடந்துகொள்வதும், தோல்வியை மனதார ஏற்றுக்கொள்வதும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான முக்கியமான இரண்டு குணங்களாகும்.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக பல நாடுகள், வீரர்களின் திறனை அதிகரிக்க ஊக்க மருந்துகளை பயன்படுத்தி, ஒரு நெறியற்ற வெற்றியை பெறுகின்றன. ‘ஊக்கமருந்து’ என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த நடைமுறை, தற்போது பல விளையாட்டுப் போட்டிகளில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, உள்நாட்டு விளையாட்டு அரங்கிலும் இதுபோன்ற ஊக்கமருந்து பயன்படுத்திய நிகழ்வுகள் உள்ளன. இந்தப் பின்னணியில், பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு எதிரான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளை, சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு கைவிட்டது இந்தியாவுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
மறுபுறம், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு, உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (World Anti-Doping Agency) நான்கு ஆண்டுகளுக்கு விளையாடத் தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், விளையாட்டு வீரர்களான அமிர்த்பால் சிங் (கூடைப்பந்து), நீரஜ் போகாட் (குத்துச்சண்டை), ஷ்ரவன்குமார் (துப்பாக்கிச் சுடுதல்) ஆகியோரை விளையாடுவதிலிருந்து தடை செய்ய, தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் முடிவுசெய்துள்ளது.
கபடி, ஈட்டி எறிதல், பளுதூக்குதல் வீரர்கள் இவர்களுடன் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் தடகள வீராங்கனை சஞ்சீவனி ஜாதவ் ஆகியோரும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். விளையாட்டில் போதிய தொழில்முறை நிபுணத்துவம் இல்லாத காரணத்தால் ரஷ்யா, துருக்கி போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இந்தப் பிரச்னையில் சிக்கியுள்ளது.
ரஷ்யா சமகால விளையாட்டு வரலாற்றில், தார்மீக சரிவுக்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒரு நாடு. உண்மையில், 298 ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மீது விசாரணையை மேற்கொள்ள உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம், ஒரு தனிப்பட்ட புலனாய்வு மற்றும் விசாரணைகளை அமைத்திருந்தது.
ஊக்கமருந்து பயன்படுத்துவது என்பது ரஷ்யாவில் விளையாட்டு அமைப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் என அனைவரும் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊக்கமருந்து பயன்பாடுக்கு எதிராகக் குவியும் குற்றச்சாட்டுகளை அடுத்து, ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் ரஷ்யாவை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்தவொரு பெரிய விளையாட்டுப் போட்டிகளிலும் போட்டியிட தடை செய்துள்ளது.
ரஷ்யாவில் ஊக்கமருந்து பயன்படுத்துவது என்பது எப்போதும் நடக்கக்கூடியதுதான் என்றாலும், இந்தியாவில் இது முற்றிலும் மாறுபட்டது. சில நபர்களின் பிழைகள் மற்றும் அறியாமை நாட்டுக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் கடுமையான ஊக்கமருந்து தடுப்புச் சட்டங்களை வகுத்துள்ளன. சைப்ரஸ், டென்மார்க், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் வீரர்களின் திறனை அதிகரிக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன.
இந்தியாவில், பல விளையாட்டு வீரர்கள் லிகாண்ட்ரோல் போன்ற தடைசெய்யப்பட்ட ஸ்டெராய்டுகளை பயன்படுத்தியதால் ஊக்கமருந்து சோதனைகளில் தோல்வியடைந்துள்ளனர். விரிவான ஊக்கமருந்து தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துமாறு, மேரி கோம் போன்ற விளையாட்டு வீரர்கள் அலுவலர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அது அவர்களின் காதுகளில் எட்டவில்லை.
கரோனா தொற்றுநோய் காரணமாக ஊக்கமருந்து சோதனைகள் நிறுத்தப்பட்டதால், வரும் நாள்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தப்போவதாக உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் கூறியுள்ளது. ஊக்கமருந்து தடுப்பு குறித்து விளையாட்டு வீரர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த, தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் ஈடுபட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நாட்டின் பெருமையை பாதிக்கும் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:40 விளையாட்டு வீரர்களுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையம் நோட்டீஸ்!