இந்திய நட்சத்திர வீரர் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில், அடுத்த விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பந்த்தை உருவாக்குவதற்காக இந்திய அணி நிர்வாகம் பந்த்துக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கிவருகிறது. ஆனால் ரிஷப் பந்த்தின் ஆட்டம் குறித்து அனைத்துத் தரப்பிலிருந்தும் விமர்சனங்கள்வருகின்றன.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் ரிஷப் பந்த்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதில், ”இன்றைய இளம் வீரர்களுக்குப் பெரிய வீரர்களுடன் ஓய்வறையைப் பகிர்ந்துகொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் ஃபார்ம் இல்லாமல் இருக்கையில், அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆலோசனைகள் வரும். ஆனால் அதற்கு காது கொடுக்காமல், பந்த் அவரது ஆட்டத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
இந்திய அணிக்காக ஆடும்போது நிச்சயம் அழுத்தம் ஏற்படும். அழுத்தமான சூழல்களில்தான், வீரர்களின் திறமை வெளிப்படும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பந்த் சிறப்பாக ஆடினார்.
தனது அறிமுக தொடரிலேயே இங்கிலாந்தில் மிகவும் அசாத்திய திறமைகளை பந்த் வெளிப்படுத்தினார். தேர்வாளர்களும், அணியினரும் ரிஷப் பந்த் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் அந்த நேரத்தை மகிழ்வுடன் ஆடவேண்டும்.
மேலும் விருத்திமான் சாஹா தான் தற்போது மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். அவருக்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தெளிவாக தெரிந்துவைத்துள்ளார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்த தசாப்தத்தில் விடைபெற்ற 90'ஸ் கிட்ஸ்களின் கிரிக்கெட் ஹீரோக்கள்! #10YearsofCricket