இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க ஆல்-ரவுண்டராக இருப்பவர் ஹர்த்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தும் பாண்டியாவுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாண்டியா, நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்துவருகிறார். அதன்பின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணியில் பாண்டியாவின் பெயர் இடம்பெற்றது. ஆனால் அவர் முழு அளவில் உடற்தகுதி பெறாததால் பாண்டியாவால் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனது.
அதன்பின் கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி வீரர்களுடன் பாண்டியா பயிற்சி மேற்கொண்டார். இதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் பங்கேற்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பியிருந்த வேளையில் பாண்டியாவின் உடற்தகுதி காரணமாக அதுவும் நிறைவேறாமல் போனது.
அதைத் தொடர்ந்து பிசியோ மருத்துவர் உடன் லண்டன் சென்ற பாண்டியா, காயம் குறித்து சோதனை செய்துகொண்டார். அண்மையில் நாடு திரும்பிய அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அணிக்கு திரும்புவதற்கான பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார். பாண்டியா அங்கு தொடர்ந்து பந்துவீச்சு பயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பாண்டியா அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாண்டியா உள்ளூரில் நடைபெறும் டிஒய் பாட்டில் டி20 போட்டியில் ரிலையன்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய செய்தி ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை முழுமையாக இந்திய அணி இழந்தது. அந்தத் தொடரில் பாண்டியா இடம்பிடித்திருந்தால் பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் இந்தியா சற்று கூடுதல் பலம் பெற்றிருக்கும் என்பது ரசிகர்களின் கூற்றாக உள்ளது.