2019ஆம் ஆண்டு முடிவுபெற்று 2020ஆம் ஆண்டு தொடங்க இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. நடப்பாண்டில் எத்தனையோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றாலும், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியும், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியும் ஒரே நாளில் அதுவும் லண்டனில் அரங்கேறியது வரலாற்று நிகழ்வாக மாற்றியது.
அது குறித்த சிறு தொகுப்பை மீண்டும் ரீவைண்ட் செய்து பார்ப்போம். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இதுவரை கோப்பையை ஒருமுறைகூட வென்றிடாத இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. அதேசமயம், கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரியதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் ஃபைனல் போட்டியும் லண்டனில் நடைபெற்றது. இதில், நட்சத்திர வீரர்களான சுவிட்சர்லாந்தின் ஃபெடரர், செர்பியாவின் ஜோகோவிச் மோதினர்.
இந்த இரண்டு போட்டிகளும் ஒரேநாளில் நடைபெற்றதால், விளையாட்டு ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை. மாறி மாறி இரண்டு போட்டிகளையும் பார்த்துவந்தனர். உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாகவே விம்பிள்டன் ஃபைனல் தொடங்கியிருந்தாலும், இரு ஆட்டங்களின் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் முடிவு பெற்றது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இரு வேறு போட்டிகளில் ஏற்பட்ட திருப்பங்களும் ஒரேமாதிரிதான் இருந்தன.
இங்கிலாந்து - நியூசிலாந்து ஆட்டம் டையில் முடிய, மறுமுனையில், விம்பிள்டனில் நடைபெற்ற முதல் நான்கு செட் போட்டிகளில் ஃபெடரர், ஜோகோவிச் இருவரும் தலா இரண்டு செட்களை வென்றிருந்தனர். இதனால் ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஐந்தாவது மற்றும் கடைசி செட் போட்டி நடைபெற, லார்ட்ஸிலும் சாம்பியன் யார் என்பதை தெரிந்துகொள்ள சூப்பர் ஓவர் நடைபெற்றது. விம்பிள்டனின் கடைசி செட் 12-12 என்ற கணக்கில் சமனில் முடிய, உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் அடித்ததால் அதுவும் 'டை'யில் முடிந்தது.
இறுதிப் போட்டி டை, சூப்பர் ஓவரும் டை என்பதால் இரண்டு அணிகளுமே சாம்பியன்கள்தான். ஆனால், பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் வென்று நீண்ட நாள் கனவை நனவாக்கியது. ஆனால் பவுண்டரி கவுண்ட் போன்ற விதிமுறையை பயன்படுத்தமால் விம்பிள்டனில் சாம்பியன் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆட்டம் மூன்றாவது முறையாக டை பிரேக்கருக்கு சென்றது.
முன்னதாகவே, முதல் மற்றும் மூன்றாவது செட்டில் டை பிரேக்கரில் வென்றது போலவே, ஐந்தாவது செட்டிலும் ஜோகோவிச் வென்று, ஐந்தாவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் ஆனார். இந்தப் போட்டி நான்கு மணி நேரம் 58 நிமிடங்களுக்கு நீடித்தது. அதிலும், கடைசி செட் மட்டும் 100 நிமிடங்களுக்கும் மேல் நடைபெற்று, விம்பிள்டன் வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்தது.
டென்னிஸ், கிரிக்கெட் என விளையாட்டுகள் வேறுபாட்டாலும், அதன் முடிவுகள் ஒரே நாளில் இப்படி இழுபறிக்குச் சென்றதுதான் விளையாட்டின் அதிசயத்திலும் அதிசயம். இதனை தற்போது நினைவுகூறும் விதமாக ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அதிசயம் நிகழ்ந்த ஜூலை 14ஆம் தேதியை வரலாறு பின்நாட்களில் நிச்சயம் நினைவு கூறும். கூடவே, ஐசிசியின் விதிமுறைகள் குறித்த கேள்வியும் சர்ச்சையும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை, விம்பிள்டன்; ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் தந்த இரண்டு ஃபைனல்ஸ்!